சுற்றுலா பஸ் டயரில் திடீர் தீ; உயிர் தப்பிய மாணவ, மாணவிகள்
குன்னுார்; குன்னுார் அருவங்காடு அருகே, கேரளா சுற்றுலா பஸ் டயரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் உள்ள கல்லுாரி மாணவ, மாணவிகள், நிர்வாகிகள், 50 பேர், ஊட்டிக்கு பஸ்சில் சுற்றுலா வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அருவங்காடு அருகே வந்தபோது பஸ்சின் டயரில் அடிப்பகுதியில், தீ பிடித்து எரிவதை கண்ட அங்கிருந்த மக்கள், பஸ்சை நிறுத்தி, மாணவ, மாணவிகள் இறக்கி விட வைத்தனர்.உடனடியாக, அருகில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் தீயை அணைத்தனர். இதனால் பஸ் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டது. தொடர்ந்து, அருவங்காடு போலீசார், மாற்று இரு வேன்களை வரவழைத்து மேட்டுப்பாளையம் வரை மாணவ, மாணவிகளை கொண்டு சென்று விட ஏற்பாடு செய்தனர். அங்கிருந்து மாற்று பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர். தீ பிடித்த போது, தீயணைப்பு வீரர்கள் உடனடிாக அணைத்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.