உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு கோடை சீசன் உட்பட, சாதாரண நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களில், 5,000 முதல், 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கிறிஸ்துமஸ்; புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடகா, கேரளா உட்பட, சமவெளி பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர்.அதிகாலை நேரத்தில் கடும் குளிரான காலநிலை நிலவியது. பகல் நேரத்தில், மழை ஓய்ந்து, வானம் தெளிவாகி இதமான காலநிலை நிலவியது.இதனால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா சிகரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை காட்சிகளை கண்டுக்களித்தனர்.சுற்றுலா வாகனங்கள் சேரிங்கிராஸ், மதுவானா, எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை மற்றும் படகு இல்லம் சாலைகளில், சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக, கோத்தகிரி சாலையில், தொட்டபெட்டா - மதுவானா இடையே, ஊர்ந்து சென்ற வாகனங்களால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறினர். உள்ளூர் மக்கள் கூறுகையில், ' கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து, வாகன நெரிசல் தொடர் கதையாகி வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.தற்போது இதற்கு தீர்வு காணவில்லை எனில், வரும் கோடை சீசனில் ஊட்டியில் உள்ளூர் மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும். இதற்கு மாவட்ட நிர்வாகம்; போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ