உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்திப்பூர் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை முதுமலையில் வருகை அதிகரிப்பு

பந்திப்பூர் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை முதுமலையில் வருகை அதிகரிப்பு

கூடலுார்: கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளதால், முதுமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் முலியூறு வனச்சரகம் அமைந்துள்ளது. இப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் நுழைந்த புலி, இரண்டு மாதங்களில், 4 பேரை தாக்கியது. அதில், 2 பேர் உயிரிழந்தனர். இருவர் சிகிச்சையில் உள்ளனர். புலி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு புலிகளில் ஒன்றை, சில தினங்களுக்கு முன் வனத்துறையினர் பிடித்து மைசூரில் இருந்து புலிகள் காப்பகத்திற்கு, கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர். மற்றொறு புலியை பிடிக்கும் பணிநடந்தது. இந்நிலையில், அதே பகுதியில் மேலும் ஒரு விவசாபி புலி தாக்கி உயிரிழந்தார். புலியை பிடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் வன ஊழியர்கள் தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்களை சமாதானப்படுத்தி புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை இதன் காரணமாக, பந்திப்பூர், நாகர்ஹோலா புலிகள் காப்பகங்களில் சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும், புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், 8ம் தேதி இரவு, மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்து கூண்டில் அடைத்து கண்காணித்து வருகின்றனர். விவசாயிகளை தாக்கி கொண்ட புலி இதுதானா என்பதை டி.என்.ஏ., பரிசோதனை மூலம் உறுதி செய்யும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு பணியும் தொடர்கிறது. இதனிடையே, புலி பிரச்னை காரணமாக மூடப்பட்ட, பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகன சவாரி நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், அதனை ஒட்டிய முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வர துவங்கியுள்ளனர். இதனால், முதுமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'சீசன் இல்லாத விடுமுறை நாட்களில் முதுமலைக்கு, நாள்தோறும், 400 சுற்றுலா பயணிகள் வழக்கமாக வருகை தருவர். பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகன சவாரி ரத்து செய்யப்பட்டதால், முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை