ஊட்டி;கோடை விழாவை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் நடப்பாண்டுக்கான கோடை விழா மேமாதம் துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உலக புகழ் பெற்ற மலர் கண்காட்சி இம்முறை, மே, 17 ம் தேதி துவங்கி, 22 ம் தேதி வரை, 6 நாட்கள் நடக்கிறது. தேர்தல் நடப்பதால், மற்ற விழாக்கள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லை
பொதுவாக, கோடை சீசன் நடக்கும் இரு மாதங்களில், 10 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம்.அவர்களுக்கான கழிப்பிடம்; குடிநீர், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இருப்பதில்லை. இதனால், ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருவது வாடிக்கையாகி விட்டது. தற்போது, சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலாலும், 6 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியை கண்டு களிக்க, திரளான சுற்றுலா பயணிகள் இம்முறை வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்னதாக நடவடிக்கைளை எடுத்துள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம்
இதன் ஒரு பகுதியாக, கலெக்டர் தலைமையில் சமீபத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டத்தில், ஊட்டி நகரில் நிலவும் குடிநீர் பிரச்னை, பார்க்கிங், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்த, தற்போதே அந்தந்த துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை தற்போதே வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் அருணா கூறுகையில்,'' ஊட்டியில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கோடை விழாவின் போது ஏற்படும் முக்கிய பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்.,களில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து சீரமைக்க வலியுறுத்தப்பட்டது. ''மேலும், தேவையான இடங்களில் 'சின்டெக்ஸ்' தொட்டியில் குடிநீர் வைக்கப்பட்டு, வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டும். விரைவில் அனைத்து கழிப்பிடங்களும் சீரமைத்து புதுபிக்கப்படும். நகராட்சி சார்பில் துாய்மையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சுய உதவிக்குழு மூலம், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான, குறைந்த விலையிலான உணவு விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.