கொளப்பள்ளி வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரு பஸ்கள் இயக்கம்
பந்தலுார்: கூடலுாரில் இருந்து பந்தலுார் வழியாக, கொளப்பள்ளி பகுதிக்கு ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் இயக்குவதால் பயன் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அரசு போக்குவரத்து கழகம், கூடலுார் கிளையில் இருந்து, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில்,சில வழித்தடங்களில், 3 மணி நேரத்திற்கு ஒரு பஸ் வருவதால், பயணிகள் தனியார் ஜீப்புகளில், கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பயணிகள் கூடுதலாக பயணிக்கும் நிலையில், ஒரு பஸ்சில், 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் நிலை தொடர்கிறது. கூடலுாரில் இருந்து, பந்தலுார் வழியாக கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிக்கும், இதே வழித்தடத்தில் நம்பியார்குன்னு பகுதிக்கும் மாலையில், ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல, கொளப்பள்ளியில் இருந்து மாலை, 4:00 -மணிக்கு பந்தலுார் மற்றும் கோவைக்கு இரண்டு பஸ்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், போதிய வருவாய் இல்லாத நிலை ஏற்படுவதுடன், மாணவர்களுக்கும் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் கூறுகையில்,'ஒரே நேரத்தில் ஒரே வழித்தடத்தில், இரண்டு பஸ்கள் இயக்குவதை தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.