வேன் மீது பைக் மோதல் விபத்தில் இருவர் பலி
பாலக்காடு: பாலக்காடு அருகே, வேன் மீது பைக் மோதி இருவர் உயிரிழந்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடும்பு ஓலச்சேரியைச் சேர்ந்தவர் மனோஜ், 42; எலக்ட்ரீசியன். அவரது நண்பர் குன்னத்தூர்மேட்டைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ், 45. நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, ஓலச்சேரியில் இருந்து பாலக்காடு நோக்கி இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது வேனை 'ஓவர்டேக்' செய்ய முயன்றபோது பைக் வேனின் பின் பகுதியில் மோதியது. இதில், கட்டுப்பாடு இழந்த பைக் சாலையில் கவிழ்ந்து, இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். பாலக்காடு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.