யானையிடமிருந்து உயிர் தப்பிய இரண்டு பேர்; சேதமடைந்த கார்
பந்தலுார் : பந்தலுார் அருகே ஏலியாஸ் கடை பகுதியில், காரை தாக்க வந்த யானையிடமிருந்து இரண்டு பேர் உயிர்தப்பினர்.கூடலுார் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மேற்பார்வையில் ஏலமன்னா பகுதியில் சி.டி.ஆர்.டி., எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்திற்கு வந்த ரங்கநாதன் மற்றும் அவரது மருமகள் பிரவீனா தேவி இருவரும் மாலை, 4:-30 மணிக்கு காரில் கூடலுார் பகுதிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீனா தேவி ஓட்டியுள்ளார். அப்போது, ஏலியாஸ் கடை அருகே சேரங்கோடு டான்டீ அலுவலகத்தை ஒட்டிய வளைவான சாலை ஓரத்தில் ஒரு குட்டியுடன் யானை ஒன்று நின்றிருந்துள்ளது. காரை பார்த்த யானை மற்றும் குட்டி சாலையில் இறங்கி வந்து காரை தாக்குவதற்கு முயன்றுள்ளன. அப்போது இருவரும் அச்சத்துடன் காரில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென காரின் கதவுகளை இடித்துவிட்டு புதர் பகுதிக்குள் சென்றுள்ளது. இதனால் காரில் இருந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இதில் காரின் முன்பக்க கதவு மற்றும் கண்ணாடி சேதமானது. இதுகுறித்து சேரம்பாடி வனச்சர் அய்யனாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாலையோரம் நின்ற யானை மற்றும் குட்டியை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவம் பந்தலுார் பகுதியில் வாகன ஓட்டுனர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.