திறக்கப்படாத கழிப்பிடம் சுற்றுலா பயணிகள் அவஸ்தை
குன்னுார்: குன்னுார்- அருவங்காடு பகுதியில் உள்ள கழிப்பிடம் நீண்ட நாட்களாக மூடி கிடப்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குன்னுார் அருகே, அருவங்காடு பகுதியில் ஜெகதளா பேரூராட்சி சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கழிப்பிடம் திறக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது முழுமையாக கழிப்பிடத்தை மூடி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில்,''காலை மற்றும் நேரங்களில் வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுற்றுலா பயணிகள் கழிப்பிடம் செல்ல முடியாததால், மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனை திறக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.