மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்
பந்தலுார்; 'பந்தலுார் அருகே பென்னை பழங்குடியின கிராமத்தில், மூடப்பட்ட அரசு பள்ளிகளை விரைவில் மீண்டும் திறக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், மாணவர்கள் சேர்க்கை 'ஜீரோவாக' உள்ள பள்ளிகளை மூடுவதாக கூறி, கல்வித்துறை அதிகாரிகளின் பரிந்துரையுடன், 25 அரசு துவக்க பள்ளிகள் மூடப்பட்டன. அதில், பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, பென்னை பழங்குடியின கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு துவக்கப்பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில், 33 பழங்குடியின மாணவர்கள் படித்து வந்த நிலையில், மறு குடியமர்வு நடத்தப்பட்ட நிலையில், அங்கு பள்ளிக்கு கட்டட வசதி இல்லாததால் பழங்குடியின பயனாளிகள் மூன்று பேர் கொடுத்த குடியிருப்பில் பள்ளி மற்றும் சமையலறை செயல்பட்டு வந்தது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து,'கல்வித்துறை அதிகாரிகளிடம், மனு கொடுத்த நிலையில் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின் கட்டட வசதி இல்லை,' என, கூறி இந்த பள்ளி மூடப்பட்டது. இங்கு படித்து வந்த பழங்குடியின மாணவர்கள் பாட்டவயல் மற்றும் முக்கட்டி அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். வன விலங்குகளுக்கு மத்தியில் வேறு பள்ளிகளுக்கு செல்வதில், பழங்குடியினர் மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில், கடந்த, 30 ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற கல்வித்துறை அதிகாரிகள், 'வரும், 8ம் தேதி பள்ளி திறக்கப்படும் என உறுதி அளித்தனர். அப்போது, 'இங்கு பள்ளி திறப்பதுடன் பள்ளிக்கு நிரந்தரமான கட்டடம் கட்டித் தர வேண்டும் மற்றும் உண்டு உறைவிட பள்ளி துவக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஆனால், இதுவரை இதற்கான பணிகள் நடக்கவில்லை. பந்தலுார் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'பள்ளியை திறந்து பழங்குடியின மாணவர்களின் கல்வி கண்ணை திறந்தால், பழங்குடியின பெற்றோருக்கு பயனாக இருக்கும். எனவே, அதிகாரிகள் உறுதி அளித்தது போல், மீண்டும் இந்த பள்ளி செயல்பட துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பழங்குடி மாணவர்களின் இடைநிற்றல் குறையும்,' என்றனர்.