உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்சன்ஸ் வேலி அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர்; கோடையில் பிரச்னையில்லை

பார்சன்ஸ் வேலி அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர்; கோடையில் பிரச்னையில்லை

ஊட்டி; ஊட்டி நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி அணை முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பில் இருப்பதால், கோடையில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில், 1.30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஊட்டியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இதனால், ஊட்டி நகருக்கான குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. ஊட்டியின் குடிநீர் தேவைக்கு, 'பார்சன்ஸ் வேலி, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா, அப்பர் கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி, மார்லிமந்து, கோரி சோலை,' உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தற்போது, கோடையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனினும், அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் தடுப்பணைகளில் ஓரளவுக்கு தண்ணீர் சேகரமாகியுள்ளது. பெரும்பாலான தடுப்பணைகளில் , 50 சதவீதத்திற்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.

ததும்பும் பார்சன்ஸ்வேலி

அதில், 18 வார்டுகளுக்கு பார்சன்ஸ் வேலி அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஏப்., மாதம் துவங்க உள்ள நிலையில், பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து பிற அணைகளுக்கும், மின் உற்பத்திக்கும் தண்ணீர் இதுவரை எடுக்கவில்லை.அவ்வப்போது கோடை மழையும் பெய்ததால் அணையில், 60 அடி வரை தண்ணீர் ததும்பி காணப்படுகிறது. இனி வரும் நாட்களில், 20 அடிவரை தண்ணீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தினாலும், ஏப்., மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என, நகராட்சி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு அவசியம்

பொதுமக்கள் கூறுகையில் ,'ஊட்டியில் விரைவில் கோடை சீசன் துவங்குகிறது. ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இரவில் சிலர் தண்ணீர் திருடி வாகனங்களில் விடுதிகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. புறநகர் பகுதிகளில் சிலர் விவசாயத்திற்கும் தண்ணீர் திருடுவது வாடிக்கையாக உள்ளது. இம்முறை அவ்வாறு நடக்காமல் இருக்க நீர்நிலை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பல தடுப்பணைகளில் தற்போதைய நிலவரப்படி , 50 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. குறிப்பாக , பெரும்பாலான வார்டுகளுக்கு பார்சன்ஸ் வேலி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இம்முறை , முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பில் உள்ளது. இதனால் , உள்ளூர் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும். தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு, விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தல்!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்டம் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இனி வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. பொது குழாயில் வரும் தண்ணீர், நீராதாரங்களிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து வாகனங்கள் கழுவுவது, திருட்டுத்தனமாக விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவது, குடிநீரை விற்பனை செய்வது போன்ற விதி மீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை