உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பகல்கோடு மந்தில் அமைத்த பால் பதப்படுத்தும் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

பகல்கோடு மந்தில் அமைத்த பால் பதப்படுத்தும் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

ஊட்டி; ஊட்டி அருகே பகல்கோடு மந்தில் பால் பதப்படுத்தும் நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் தோடர் பழங்குடியின மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர் பழங்குடியின மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எருமைகள் ஓர் அங்கம். எருமைகள் தோடர்களுக்காக கடவுளாக படைக்கப்பட்டவை என்பதும் இவர்களின் நம்பிக்கை.

குடும்ப உறுப்பினராக எருமைகள்

தோடர் எருமை, 5 லிட்டருக்கும் குறைவாகவே பால் தரும். பால் மிகவும் அடர்த்தியாகவும், திடமாகவும் இருக்கும். அதில், பாரம்பரிய உணவான, பால் சாதம், நெய் சாதம், 'ஓட்வியதோர்' எனப்படும் உருண்டை சாதம் ஆகியவை செய்யப்பட்டு, இம்மக்கள் உட்கொள்கின்றனர்.ஒவ்வொரு தோடரின மக்களின் வீட்டிலும் குடும்ப உறுப்பினர் போல எருமை பாவிக்கப்படுகிறது. தோடர் கோவில்களில் எருமையின் கொம்பு அல்லது எருமையின் தலை வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். இவர்களின் வழிபாடுகளில், கோவில் எருமையின் பால் முக்கியத்துவம் வாய்ந்தது.எருமைகளின் நலனுக்காக உப்பு சாஸ்திர விழா ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகிறது. இதனால், எருமைகள் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆரம்பத்தில், ஒரு குடும்பத்தில், 100க்கும் மேற்பட்ட எருமைகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. புல்வெளிகளை சீகை, கற்பூரம் மற்றும் பைன் மரங்கள் ஆக்கிரமித்ததால் மேய்ச்சல் நிலங்கள் சுருங்கியதும் இவைகள் குறைய காரணம்.

அரசு திட்டம் வராததால் அதிருப்தி

இந்நிலையில், தோடர் எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பால் பதப்படுத்தும் நிலையம் அமைத்து, தோடர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில், பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது. அதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டு முன், ஊட்டி பகல்கோடு மந்து பகுதியில் திறந்து வைத்தார். மேலும், பால் பதப்படுத்தும் மைய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்தார். ஆனால், இதுவரை பால் பதப்படுத்தும் நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், தோடர் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து, பால் பதப்படுத்தும் மையத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தோடர் மக்கள் கூறுகையில்,' இந்த மையம் முழுமையாக செயல்பட்டால், எருமை பால் பதப்படுத்தப்பட்டு வழங்கப்படும். மேலும், அழிவின் பிடியில் உள்ள எருமைகளின் எண்ணிக்கை பெருக்கவும் வழி ஏற்படும். முதல்வரால் திறக்கப்பட்ட இந்த மையத்தை செயல்படுத்த இதுவரை, மாநில பால் வளத்துறை மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை