முகாமிடும் காட்டு யானைகள்: வனத்துறை எச்சரிக்கை
கூடலுார், : மேல் கூடலுார் அருகே உள்ள கோக்கால் பகுதியில், காட்டு யானைகள் முகாமிடுவதால், இப்பகுதி சாலையில் மக்கள் கவனமாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேல் கூடலுாரில் இருந்து கோக்கால் வழியாக லாரஸ்டன் குடியிருப்பு, பழங்குடி கிராமத்துக்கு சாலை பிரிந்து செல்கிறது. சாலையை ஒட்டி, கோக்கால் வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியில், காட்டு யானைகள் அடிக்கடி முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் சாலையை ஒட்டிய வட்டபாறை அருகே, வேட்டை தடுப்பு முகாம் அமைத்து, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன. மேலும், பழங்குடியினர் நுழைவுவாயில் பகுதியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயல்படும் கேமராக்கள் பொருத்தி, காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், அவ்வப்போது முகாமிடும் யானைகளை, வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனினும், யானைகளால், எதிர்பாராத நேரத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவ்வழியாக செல்லும் சாலையில் மக்கள் கவனமாக செல்ல வேண்டும்,' என்றனர்.