கானுயிர் பாதுகாப்பு தினம்; பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு
கோத்தகிரி ; கோத்தகிரி கேர்பெட்டா அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக கானுயிர் பாதுகாப்பு தினத்தை ஒட்டி, சிறப்பு கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:மனித குலம் தோன்றிய நாளில் இருந்து, வன விலங்குகளை அழிப்பதே அவர்களுடைய வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளது. தற்போது, உலகில் உள்ள உயிரினங்களில், 10 சதவீதம் வனவிலங்குகள் மட்டுமே உள்ளன.மனிதர்களால், தங்கள் தேவைக்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடு போன்ற வளர்ப்பு உயிரினங்கள், 70 சதவீதம் உள்ளன. யானைகளின் தந்தம், புலிகளின் பற்கள் மற்றும் எலும்புகளுக்காக, சீன மருத்துவத்திற்கு பெருமளவில் கொல்லப்படுகிறது. நீண்ட நாள் வாழக்கூடிய, கடல் ஆமைகளும், உலக அளவில் பேரழிவை சந்தித்து வருகின்றன. மீன்கள், 90 சதவீதம் மனிதர்களால் அழிக்கப்பட்டுள்ளன. இது போன்ற பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இது, பாதுகாக்கப்பட வேண்டும்.பூமியையும் மக்களையும் இனணக்க கானுயிர் பாதுகாப்பில் டிஜிட்டல் பயன்பாடு முக்கியம். காடுகளை அழிப்பதன் மூலம், வன விலங்குகளின் வாழ்வாதாரமும், வாழிடமும் அழிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.