நடப்பாண்டு இறுதிக்குள் மின் உற்பத்தியை துவக்கும் பணிகளில் வேகம்! நீரேற்று மின் திட்டத்தில் இரு பிரிவுகள் நிறைவு பெறும்?
ஊட்டி: குந்தா நீரேற்று மின் திட்ட பணிகளில் 2 பிரிவில், 250 மெகாவாட் மின் உற்பத்தியை, நடப்பாண்டு இறுதிக்குள் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், மின்வாரியம் திட்ட பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே காட்டுகுப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளில், 500 மெகாவாட் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில், ஒரு பிரிவில்,125 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் மின் உற்பத்தி பணி கடந்த, 2022 டிச., மாதம் நிறைவடைந்து உற்பத்தி துவக்கி இருக்க வேண்டும். ஆனால், காட்டு குப்பையில் நிலவிய மாறுப்பட்ட கால நிலையாலும், நிர்வாக பணியில் ஏற்பட்ட இடையூறுகளால் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. 150 அடி நீர் வெளியேற்றம்
அரசின் உத்தரவின் கீழ், கடந்தாண்டு நவ., மாதம் ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி , குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு அணை, நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருப்பதால் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.எமரால்டு அணையின் மொத்த அடியான 184 அடியில் 80 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. எமரால்டு அணையை தொடர்ந்து, போர்த்தி மந்து அணையின், 130 அடியில், 90 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின், கோடை காலம் துவங்கியதை அடுத்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய துவங்கியது. தற்போது, காட்டு குப்பை மின் திட்ட பணி வளாகத்தில் நவீன மின்சாதன கருவிகள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மறு சுழற்சியாக ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு வரும் ஒரு கி.மீ., துாரம் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டு இறுதியில் துவக்கம்
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குந்தா நீரேற்று மின் திட்ட பணி கடந்த, 9 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் தாமதம் ஆகிவிட்டது. தற்போது , 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. திட்டத்தில் உள்ள, 4 பிரிவுகளில் தலா 125 மெகாவாட் வீதம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.அதில், 2 பிரிவுக்கான தலா 125 மெகாவாட் வீதம், 250 மெகாவாட்டுக்கான மின் உற்பத்தி நடப்பாண்டு நவ., அல்லது டிச., இறுதிக்குள் மின் உற்பத்தி துவக்கப்படும். சம்மந்தப்பட்ட பகுதியில் மழையால் அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலை நிலவினாலும், பணிகள் விரைவாக நடந்து வருகிறது,' என்றனர்.