360 சவரன் நகை மோசடி தம்பதி சிறையில் அடைப்பு
பெரம்பலுார்: வீட்டு உரிமையாளரிடம், 360 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வாடகைக்கு குடியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், ஜமாலியா நகரைச் சேர்ந்தவர் உம்மல்பஜரியா, 44. இவரது கணவர் பசீர்அஹமத்; வெளிநாட்டில் டிரைவராக பணிபுரிந்தார். இவர்கள் வீட்டின் மாடியில், பஜிலுல்ரஹ்மான், 52; அவரது மனைவி பர்வீன்பானு, 46, ஆகியோர் குடியிருந்தனர். தன் கணவர் பஜிலுல் ரஹ்மான் செய்து வந்த தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்காகவும், அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் நகையை திருப்பி தருவதாகவும் கூறி, உம்மல்பஜரியாவிடமிருந்து 360 சவரன் தங்க நகைகளை, 2017ல் பர்வீன்பானு பெற்றுள்ளார். நகையை திரும்ப கொடுக்காததால், திருப்பி தர தொடர்ந்து வற்புறுத்தியதில் ஆத்திர மடைந்த பஜிலுல்ரஹ்மான், பர்வீன்பானு, இவர்கள் மகள்கள் அப்ரீன்பானு, நஸ்ரின்பானு, உறவினர் ஹயத்பாஷா மற்றும் வெள்ளுவாடி கிராமத்தை சாரதி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். உம்மல்பஜரியா பெரம்பலுார் எஸ்.பி., ஆதர்ஷ்பசேராவிடம் புகார் கொடுத்தார். பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பஜிலுல்ரஹ்மான் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிந்து, பஜிலுல்ரஹ்மான், பர்வீன்பானு ஆகியோரை கைது செய்தனர்.