மேலும் செய்திகள்
'டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்'
19-Oct-2024
புதுக்கோட்டை, நவ. 9--''கடந்த மூன்றரை ஆண்டுகளில் 10.50 லட்சம் கோடி முதலீடும், 31 லட்சம் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன,'' என, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில், சிப்காட் தொழிலதிபர்களின் குறைதீர் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடந்தது.இதில், அமைச்சர்கள் ரகுபதி, ராஜா மற்றும் எம்.பி., அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.பின், தொழிலதிபர்களின் குறைகளை கேட்டு அறிந்த, தொழில் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:தமிழகத்தில் உள்ள சிப்காட் பகுதிகளில், உபயோகிக்கப்படாத நிலங்கள் மற்றும் மூடப்பட்ட தொழிற்சாலைகளின் நிலங்களை மீட்க, சிப்காட் மேலாளர் மற்றும் திட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுக்கோட்டையில், சிப்காட் தொடங்கும் போது, இது ராசி இல்லாத இடங்களில் துவக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் வந்ததாக தொழிலதிபர்கள் கூறினர். முதல்வர் ஆகுவதற்கு ராசி இல்லாதவர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டவர் தான், தற்போதைய முதல்வர். இது போன்ற விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர்.அதே போல, புதுக்கோட்டை சிப்காட் வளாகமும் ராசி இல்லாத வளாகம் என்று கூறப்படும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடுகுடுப்பைகாரனாக மாறி கூறுகிறேன்... நிச்சயம் புதுக்கோட்டை சிப்காட் வளர்ச்சி பெறும். நல்ல காலம் பிறக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த மூன்றரை ஆண்டுகளில் 10.50 லட்சம் கோடி முதலீடும், 31 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியாளர்களுக்கும் தற்போதைய முதல்வருக்கும் முதலீடுகளை ஈர்த்து அதை முதலீடுகளாக மாற்றுவதற்கு பெரிய வித்தியாசம் இருக்கும்.தமிழக முதல்வர் அமெரிக்க சென்று வந்த பிறகு அதன் மூலம் முதலீடுகள் 100 சதவீதமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. முழுமையாக புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு முதலீடுகளாக மாற்ற குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டதற்கு தமிழக முதல்வர் ஏற்கனவே பதில் அளித்து விட்டார். பழனிசாமிக்கு பேசுவதற்கு எதுவும் இல்லாததால் எதையோ பேசி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
19-Oct-2024