திருமயம் அருகே விபத்து: இருவர் பலி; 5 பேர் காயம்
புதுக்கோட்டை : திருமயம் அருகே கார் மற்றும் மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில், டிரைவர் மற்றும் மொபட்டில் சென்ற ஒரு பெண் என, இருவர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர், திருச்சி, சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, புதுக்கோட்டை வழியாக திருச்செந்துார் செல்ல, திருச்சி -- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், 'ஹுண்டாய் ஐ20'காரில் சென்று கொண்டிருந்தனர்.புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் பகுதியில், முன்னால் சென்ற காரை முந்திச் சென்ற போது, எதிரே வந்த டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில் மோதி, கார் விபத்துக்குள்ளானது.இதில், காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், தாலுகாப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், 38, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மொபட்டின் பின்னால் அமர்ந்து சென்ற திருமயம் ஏனப்பட்டியை சேர்ந்த லட்சுமி, 65, உயிரிழந்தார்.விபத்தில், காரில் சென்ற நான்கு பேர் மற்றும் மொபட்டை ஓட்டி சென்ற ஒருவர் என, ஐவர் படுகாயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.