காவேரி - வைகை - குண்டாறு திட்டம் பணியை விரைவுபடுத்த ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: காவேரி - வைகை - குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் நுாறாண்டு கனவு திட்டமான காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக போதிய நிதியை ஒதுக்கி பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை கைவிட்டு, உள்நாட்டு விவசாயிகளால் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.