சன்னதி வழியாக மூலவர் மீது சூரிய ஒளி படரும் அற்புதம்
புதுக்கோட்டை:குடுமியான்மலையில், சிவன், நந்தி சிலைகள் மீது சூரிய கதிர் விழும் அற்புத நிகழ்வு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அழகிய சிற்பக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இங்கு, அகிலாண்டேஸ்வரி சமேத சிகாநாதர்சுவாமி கோவில் உள்ளது. மேலும், மலையின் உச்சியில் முருகன் சன்னதி உள்ளது. கிழக்குப்பகுதியில் இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் இல்லாத கர்நாடக சங்கீத ஸ்வரம் குறித்த கல்வெட்டுகளும், மேற்கு பகுதியில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உள்மண்டபத்தில் உள்ள கல்துாண்களில் கலைநயமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்த கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவின் போது, சிவன், நந்தி மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், பங்குனி உத்திர தெப்ப திருவிழாவையொட்டி, நேற்று காலை சுவாமி வீதியுலா முடித்து உள்ளே வரும் போது, நந்தி, சிவன் சிலைகள் மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த அற்புத காட்சியை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வணங்கினர். இந்நிகழ்வு தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் என பக்தர்கள் கூறினர்