திருவாடானை தொகுதியில் 29 புதிய ஓட்டுச்சாவடிகள்
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் 29 ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. அதற்கான பணிகள் நடக்கிறது.திருவாடானை சட்டசபை தொகுதியில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:அதிகரிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் 1200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அதை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவாடானை சட்டசபை தொகுதியில் ஏற்கனவே 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தற்போது இந்த ஓட்டுச்சாவடிகள் 376 வரை அதிகரிக்கும். அதன்படி புதிதாக அமைக்கப்படவுள்ள 29 ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆய்வு பணிகள் நடக்கிறது என்றனர்.