| ADDED : மே 26, 2024 03:56 AM
கீழக்கரை: வெளிநாடுகளில் ஏராளமான மாணவர்கள் இந்தியாவில் இருந்து சென்று அங்கு கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் கல்வி பயின்றதோடு நிற்காமல் பிறருக்கு ஏதேனும் பயனுள்ள வகையில் தனது செயல்பாடுகளை ஆற்றுகின்றனர். அந்த வகையில் கீழக்கரையைச் சேர்ந்த ஆமீர் 23, என்ற மாணவர் சாதனை படைத்துள்ளார். இவர் இங்கிலாந்து செபீல்டு பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவராக மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புதிய விளையாட்டுகளை உருவாக்கும் முயற்சில் இரண்டு கம்ப்யூட்டர் கேம்களை உருவாக்கியுள்ளார்.கலர் டேஷ் மற்றும் பிளைட் பிரின்சி என்ற 2d விளையாட்டு கேம்களின் மூலம் கிடைக்கும் வருவாயின் 100 சதவீதம் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.கீழக்கரை மாணவர் ஆமீர் கூறியதாவது:கம்ப்யூட்டர் கேமை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இத்திட்டம் ஓராண்டிற்கு முன்பு எனது மற்றும் நண்பர்கள் சிந்தனையில் தோன்றியது. தற்போது இங்கிலாந்தில் உள்ள எந்த பல்கலையிலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாணவர்கள் நடத்தும் வீடியோ கேம் குறித்த முயற்சியாக வளர்ந்துள்ளது.இத்திட்டம் வளரத் துவங்கிய போது ஷெபீல்டு பல்கலை ஒத்துழைப்பை தந்தது. அங்கு பயின்று வரும் மாணவர்கள் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதை வெறும் அறிவியல் முயற்சியாக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கலை, களஞ்சியம், பொறியியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என பயிலும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.இத்திட்டம் மூலம் விளையாட்டு மேம்பாட்டு குறித்தும் கற்றுக் கொள்வதற்கு இதை பெரிய இயக்கமாக மாற்ற விரும்புகிறேன். மாணவர்கள் ஒலி தயாரித்தல் மற்றும் கிராபிக்ஸ் வடிவமைத்தல், கதையாக்கம், கதாபாத்திரம் உருவாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் என மாணவர்கள் விளையாட்டு மேம்பாட்டின் ஒவ்வொரு துறையிலும் குழுக்கள் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.இந்த நிகழ்வு இங்கிலாந்து முழுவதும் தமிழக மாணவர்களுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது என்றார்.