தனிச்சியம் ஊராட்சியில் தரமின்றி கட்டப்பட்ட புதிய குடிநீர் கிணறு அரசு நிதி வீணடிப்பு
சிக்கல்: சிக்கல் அருகே தனிச்சயம் ஊராட்சியில் தரமற்ற பணியால் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் கிணற்றின் பக்கவாட்டு தரைத்தளம் 2 அடி ஆழத்திற்கு மண்ணில் புதைந்துள்ளதால் ஐந்து குடம் தள்ளுவண்டிகளில் தண்ணீர் சேகரிக்கும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடலாடி ஒன்றியம் தனிச்சயம் ஊராட்சியில் ஆத்தோடை கண்மாயில் திறந்த வெளி கிணறு கணக்கு எண் -2 ன் கீழ் 2022 -- 23க்கான உபரி நிதி திட்டத்தில் ரூ.9.60 லட்சத்தில் கட்டப்பட்டது.தற்போது புதிய குடிநீர் கிணற்றில் தண்ணீர் சேகரிக்க கூட பயன்படாத நிலை உள்ளது. அரசு நிதி வீணடிப்பதை தடுக்க வேண்டும். தன்னிச்சயம் கிராம மக்கள் கூறியதாவது:எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது.ஆத்தலோடை கண்மாய் கரையோரத்தில் அமைக்கப்பட்ட பெரிய வட்டக்கிணற்றின் பிளாட்பாரம் தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதால் கட்டப்பட்ட இரண்டு மாதங்களில் இரண்டு அடி ஆழத்திற்கு கீழே இறங்கிவிட்டது. கட்டுமானப் பணிகளுக்கு தரமற்ற மணலை பயன்படுத்தியதே காரணம். நல்ல தண்ணீர் கிடைத்தாலும் பயன்படுத்த வழி இல்லாமல் உள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை தான் தொடர்கிறது.குடிநீர் கிணற்றை சுற்றிலும் பொதுமக்கள் தண்ணீர் இறைப்பதற்காக கூடுவார்கள். அப்போது சேதமடைந்த பிளாட்பாரம் உள்ளே இடிந்து விழும் பேராபத்து நிலவுகிறது. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் கிணற்றை ஆய்வு செய்து புதிய பிளாட்பாரத்தை தரமாக கட்டவும், மின்மோட்டார் பொருத்தி அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.