நோயாளிக்கு வாங்கிய பார்சல் உணவில் புழு கிடந்ததால் ஓட்டலுக்கு நோட்டீஸ்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள பிரபல ஓட்டலில் நோயாளி சாப்பிடுவதற்காக வாங்கிய பார்சல் உணவில் கீரை கூட்டில் புழு இருந்த வீடியோ பரவுகிறது. இதையடுத்து விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறையினர் ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர்.உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தொண்டியை சேர்ந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சாப்பிடுவதற்காக பாரதிநகர் பீமாஸ் சைவ ஓட்டலில் உறவினர் ஒருவர் பார்சல் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளார்.அதை பெண் சாப்பிட்ட போது கீரைக் கூட்டில் புழு கிடந்தது. சாப்பிடும் போது அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதை வீடியோ பதிவு செய்து உறவினர்கள் இணையதளங்களில் பகிர்ந்துள்ளனர்.மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், வாரந்தோறும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்து தரமான உணவு வழங்குவதை கண்காணிக்கிறோம். கீரைக் கூட்டில் புழு இருந்ததாக புகார் வந்துள்ளது. புகார் குறித்து விளக்கம் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.