| ADDED : ஜூன் 14, 2024 10:28 PM
திருப்புல்லாணி : முளைக்கொட்டு உற்ஸவத்தில் முளைப்பாரிக்கு முன்னால் கரகம் எடுத்து ஆடிச்செல்லும் அம்மாடிகள் முக்கிய பங்காற்றுகின்றனர்.திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமங்கள் தோறும் முத்து மாரியம்மன், காந்தாரியம்மன், பத்திரகாளியம்மன், மாரியம்மன், கூனியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கான கோயில்கள் ஏராளமாக உள்ளன.சித்திரை மாதம் துவங்கி பங்குனி வரை தொடர்ந்து கிராமங்களில் முளைப்பாரி உற்ஸவம் மற்றும் முளைக்கொட்டு திருவிழா நடப்பது வழக்கம்.கிராமத்தில் உள்ள கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழாவை விமரிசையாக கொண்டாடுவதற்கு அம்மாடிகள் என்றழைக்கப்படும் கோயில் தொண்டாற்றும் தன்னார்வலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.திருப்புல்லாணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் தற்போது முளைப்பாரி விழாவிற்கு தயாராகி வருகின்றனர். பஞ்சந்தாங்கியைச் சேர்ந்த கோயில் அம்மாடி பாலமுருகன் கூறியதாவது:கிராம கோயில்களில் அம்மாடி என்றழைக்கப்படுவோர் முளைக் கொட்டு மற்றும் முளைப்பாரி உற்ஸவ விழாவில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். கோயில் பூஜாரிக்கு அடுத்தபடியாக அம்மாடிகளுக்கு தனி மதிப்பு உள்ளது.சேதுக்கரை கடலில் புனித நீராடி விட்டு தீபாராதனை காட்டப்படும் போது பத்துக்கும் மேற்பட்டோர் ஒரு வரிசையாக நிற்க வேண்டும். அப்போது அருள் வந்து ஆடுவோர் தலைமை அம்மாடியாக தேர்வு செய்யப்படுவர். அதனை தொடர்ந்து தன்னார்வலர்களாக அம்மாடிகள் குழு அமைக்கப்படும்.முத்துக்கள் பரப்பப்பட்டு பாரி வளர்ப்பது, அன்றாடம் பாரிகளுக்கு தண்ணீர் விடுவது, கோயில்களை சுத்தமாக பராமரிப்பது, முளைப்பாரி ஊர்வலத்திற்கு முன்பாக கரகம் வைத்து செல்வது என முக்கிய பங்கு அம்மாடிகளுக்கு உள்ளது.தொடர்ந்து 15 நாட்களுக்கு விரதம் இருந்து விழா நிறைவடையும் வரை முழு நேரமும் கட்டுப்பாட்டுடன் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.இது போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் அம்மாடிகள் ஏராளமானோர் கிராம கோயில்களில் சேவை ஆற்றி வருகின்றனர் என்றார்.