| ADDED : மே 05, 2024 06:39 AM
கமுதி : -கமுதி பஸ்ஸ்டாண்ட் அருகே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பராமரிப்பும் இன்றி பூட்டி கிடந்த சிறுவர் பூங்கா தற்போது புதுப்பொலிவுடன் சீரமைப்பு பணி செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கமுதி பஸ்ஸ்டாண்ட் அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் காத்திருப்பதற்காகவும், சிறுவர்கள் விளையாடுவதற்காகவும் பேரூராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பின் முறையான பராமரிப்பின்றி பூங்கா பூட்டப்பட்டது.கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூங்கா பூட்டிக் கிடந்தது. தற்போது பேரூராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் முயற்சியால் சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் மராமத்து பணி செய்யப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக புதுப்புது உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்ணம் பூசி, மரக்கன்றுகள் நட்டு ரூ.7.50 லட்சத்தில் பராமரிக்கப்பட்டுள்ளது. இப்பணியை பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, துணைத் தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை, கவுன்சிலர்கள் போஸ் செல்வா, பொன்னுச்சாமி ஆய்வு செய்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடியின்றி இருந்த சிறுவர் பூங்கா புதுபொலிவுடன் மாறி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காலதாமதம் செய்யாமல் விரைவில் திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.