| ADDED : ஜூன் 15, 2024 02:00 AM
ராமநாதபுரம்:துாத்துக்குடி கடலில் எல்லையை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜூன் 28 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.துாத்துக்குடி பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் வைபவ் கப்பலில் ரோந்து சென்ற போது எல்லை தாண்டி இந்திய பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் இலங்கை காலே மாவட்டம் அம்பலன்கோடா பகுதியை சேர்ந்த ராமுது இண்டிகா திலிப்குமார 42, போக்லே பியால் டி சில்வா 44, கழுத்தோடக நிரங்க லக்மால் 27, கபுகே கியாங்கே தாரக அமிலகுமார 40, சுசாந்தா 39, ராம்புத்ரா சமிந்தா புஷ்ப குமார 37, மாலியா வடு சுபாலி 57, ஆகிய ஏழு பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த விசாரணையில் 7 மீனவர்களுக்கும் ஜூன் 28 வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.