வருமானம் தரும் சூரியகாந்தி சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்
பெருநாழி: பெருநாழி சுற்றுவட்டார பகுதியில் டி.வி.எஸ்.புரம், திம்மநாதபுரம், பாப்பிரெட்டியபட்டி உள்ளிட்ட இடங்களில் வறட்சியில் வருமானம் தரும் சூரியகாந்தியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.சூரியகாந்தியில் கொழுப்பின் அளவு குறைவாகவும் லினோலிக் அமிலம் அதிகமாக உள்ளதால் இதய நோயாளிக்கு உகந்ததாக கருதப்படுகிறது. சரியான தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் விவசாயிகள் சூரியகாந்தி மூலம் அதிக வருமானம் பெறலாம். திம்மநாதபுரத்தை சேர்ந்த விவசாயி சின்னாண்டி கூறியதாவது:சராசரியாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்க வேண்டும். பூக்கும் நேரத்தில் அதிக அளவு காற்றின் இருப்பதும் மற்றும் அதிகளவு மழை பெய்தால் மகசூலை பாதிக்கும். நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண், கரிசல் நிலங்களில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது.1 எக்டேருக்கு 8 முதல் 10 கிலோ விதை போதுமானது. 30 செ.மீ., முதல் 60 செ.மீ., இடைவெளி விட்டு வளர்க்க வேண்டும். 4 மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த பத்து நாட்களுக்குள் சூரியகாந்தி செடிக்கும் இடையே 20 செ.மீ., இடைவெளி இருக்க வேண்டும்.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து பெருவாரியான வெள்ள நீர் பாதிப்பால் நெல், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் தற்போது சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியானப் பகுதிகளில் தற்போது செழித்தி வளர்வது விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருமானத்தை கொடுக்கிறது என்றார்.