உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜல்லிக்கட்டு பெற்றுத்தந்த ரியல் ஹீரோ மோடி தான்: பரமக்குடியில் பன்னீர்செல்வம் பேச்சு

ஜல்லிக்கட்டு பெற்றுத்தந்த ரியல் ஹீரோ மோடி தான்: பரமக்குடியில் பன்னீர்செல்வம் பேச்சு

பரமக்குடி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பரமக்குடி சட்டசபை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது.பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: காங்., கட்சியின் தவறான சட்டத்தால் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நான் முதல்வராக இருந்த போது தான் பிரதமர் மோடி மீட்டெடுத்தார். என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். ஆனால் அதன் ரியல் ஹீரோ பிரதமர் மோடி தான்.தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய அளவில் ஒரே சுயேச்சை வேட்பாளர் நான் தான். நாட்டில் ஏகப்பட்ட பன்னீர் செல்வங்கள் வந்துவிட்டனர். 5 பன்னீர் செல்வங்களை தேடிப் பிடித்து நிறுத்தி உள்ளனர் விஷமிகள். நான்கரை ஆண்டுகள் தமிழக ஆட்சியில் ஒத்துழைப்பு தந்தவர் மோடி. அப்போது என்னை துணை முதல்வராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டம் கொண்டு வந்து குடிநீர் பிரச்னையை மோடி தீர்த்துள்ளார். நான் வெற்றி பெற்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவேன். தொழிற்சாலைகளை உருவாக்குவதோடு பொருளாதாரத்தை முன்னேற்ற பாடுபடுவேன். உ.பி., யில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். நான் பல தேர்தல்களை இயக்கத்தின் சார்பில் சந்தித்திருந்தாலும், நிராயுதபாணியாக சுயேச்சை வேட்பாளராக உள்ளேன். நாட்டில் 400 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ., ஜெயிக்கும் போது நானும் அதில் ஒருவனாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி உருவான போது பழனிசாமியை தனது வலது பக்கத்தில் அமர வைத்தார். ஆனால் ஒரு வாரத்திலேயே கூட்டணியை முறித்துக் கொண்டார். நான்கரை ஆண்டில் எந்த பிரச்னையும் இன்றி ஆட்சி நடத்த வழி வகுத்தவர் மோடி. அவருக்கு துரோகம் செய்துள்ளார் பழனிச்சாமி. கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் சொத்து. அதற்கான ஆவணம் தமிழக அரசிடம் உள்ளது. அதனை மீட்க மோடியுடன் நானும் ஒரு காரணியாக இருப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ