| ADDED : ஆக 15, 2024 04:05 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு முளைப்பாரி விழா நடைபெற்றது.ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளான இந்திராநகர், வாணியக்குடி, மேலேந்தல், தும்படைக்காக்கோட்டை, ஆணையர்கோட்டை, புல்லமடை, குலமாணிக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆக.6 ல் காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி விழா துவங்கியது.அன்று முதல் தினமும் இரவில் அம்மன் கோயில்கள் முன்பு இரவில் பெண்கள் கும்மியாட்டம் இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவில் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.நேற்று கோயிலில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்து நீரில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் முளைப்பாரி விழா கொண்டாடப்பட்டதால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் முளைப்பாரிக்கு தேவையான பொருட்கள், பூ விலை இரண்டு மடங்கு உயர்ந்தது.