பொது தண்ணீர் தொட்டி வேண்டும் முத்துசெல்லபுரம் மக்கள் போராட்டம்
ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா முத்துசெல்லபுரம் கிராமத்தில் பொது தண்ணீர் தொட்டி அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேந்தோணி ஊராட்சி முத்துசெல்லபுரத்தை சேர்ந்த ஊர்மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பிப்.10 ல் மனு அளித்தனர். இதில் ஊர்மக்கள் வசதிக்காக வெங்கிட்டான் குறிச்சி கண்மாய் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவங்கி சிலரது எதிர்ப்பால் பாதியில் விட்டுள்ளனர்.இதனால் பொதுமக்கள் குளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தண்ணீர் தொட்டி பணியை மீண்டும் துவக்க வலியுறுத்தினர். இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இதனை கண்டித்து முத்துசெல்லபுரம் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலமாக வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது. மீண்டும் கலெக்டரிடம் மனுஅளியுங்கள் என போலீசார் கூறினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.