| ADDED : ஆக 12, 2024 11:52 PM
திருப்புல்லாணி : திருப்புல்லாணி, சிக்கல், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நுாறுக்கும் அதிகமான கிராமங்களில் பனை மரங்கள் அதிகளவு உள்ளன.மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் பனை மரங்கள் மிகுதியான அளவில் வளர்ந்துள்ளதால் அதனை நம்பி ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. எல்லா காலங்களுக்கும் ஏற்ற பொருளாக பனை உற்பத்தி பொருள் அமைகிறது.பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு, நுங்கு, பனம்பழம் உள்ளிட்டவைகளும் பனை ஓலையில் இருந்து கலைநய பொருள்களும் செய்யப்படுகின்றன.பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை தரும் பனை மரத்தை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செங்கல் சூளைகளுக்காக பெருவாரியான நன்கு வளர்ந்த பயன் தரக்கூடிய பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது. பனைமரக்கூட்டங்கள் இருந்த இடங்கள் தற்போது அழிவின் விளிம்பை நோக்கி செல்கிறது.இங்கு 40 முதல் 80 ஆண்டுகளான பனை மரங்கள் பலன் தந்து கொண்டிருக்கும் நிலையில் ரியல் எஸ்டேட்டிற்காக இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி அழிக்கப்படுகிறது. பனைப் பொருள்கள் உற்பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் சிறந்து விளங்கும் நிலையில் இடைத்தரகர்கர்களால் அழிகின்றன. தமிழ்நாடு பனை வெல்ல கூட்டுறவு வாரியம் சார்பில் பனை சார்ந்த பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பனைமரங்களை அழிவிலிருந்து காப்பதற்கு வருவாய்த்துறைடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.