| ADDED : மே 29, 2024 05:03 AM
கமுதி : கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டிக்கு புதுப்பட்டி வழியாக புதிதாக ரோடு அமைக்கும் பணி எட்டு மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பஸ் வசதி இல்லாமல் மக்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது.பெருமாள் குடும்பன்பட்டியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.கிராமத்திற்கு புதுப்பட்டி வழியாக கமுதிக்கு செல்லும் சாலை கடந்த 8 மாதத்திற்கு முன்பு புதிய ரோடு அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.பின் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லிகற்கள் மட்டும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த தேவேந்திரன் கூறியதாவது: பெருமாள் குடும்பன்பட்டிக்கு புதுப்பட்டி வழியாக புதிய ரோடு அமைக்கும் பணி நடந்தது. தற்போது 8 மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கமுதியிலிருந்து திருசிலுவையாபுரம், புதுப்பட்டி, பெருமாள் குடும்பன்பட்டி வழியாக பரளச்சிக்கு அரசு பஸ் மூன்று வேளை இயக்கப்பட்டு வந்தது.தற்போது ரோடு பணியால் ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலையால் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக அரசு பஸ் இயக்கப்படவில்லை.அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பஸ் வசதி இல்லாததால் 3 கி.மீ.,ல் நடந்து சென்று முஷ்டக்குறிச்சியில் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் கமுதிக்கு செல்கின்றனர்.அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது.பஸ் வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் பரளச்சிக்கு செல்லும் முஷ்டகுறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, பெரிய மணக்குளம் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கிராம மக்களின் நலன் கருதி புதிய ரோடு பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பஸ் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என்றார்.