| ADDED : ஜூன் 22, 2024 05:00 AM
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் வசிக்கும் விதவைப் பெண் லதா 55, வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தார்.தங்கச்சிமடம் ஊராட்சி அன்னை தெரசாள் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மீனவர் லோவிதாஸ், மனைவி லதா, மகன், மகளுடன் 20 ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கிறார். இந்த வீட்டுக்கு தமிழக அரசின் இலவச மனைப்பட்டா வழங்க கோரி கடந்த 10 ஆண்டுகளாக லோவிதாஸ் தம்பதியினர் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு லோவிதாஸ் உயிரிழந்ததால் அன்றாட குடும்பச் செலவுக்கு கூலி வேலைக்கு லதா செல்கிறார். நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், மக்களிடம் புகார் மனு வாங்கும் முகாம் நடந்தது. இதில் மனு கொடுக்க வந்த லதா காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை காத்திருந்தார். அவர் கூறியதாவது: கணவர் இறந்ததும் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தும் அவல நிலை உள்ளது. வீட்டு மனை பட்டா கேட்டு 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என வேதனை தெரிவித்தார்.