பிரதமர் வருகை : பாம்பன் பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வர உள்ளதால் மூன்றாம் கட்டமாக பாலத்தில் விழா ஏற்பாடு ஒத்திகை நடந்தது.பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி மார்ச்சில் திறக்க உள்ளார். இதற்காக பாம்பன் புதிய, பழைய ரயில் பாலத்தின் துாக்கு பாலங்களை திறந்து ரோந்து கப்பல் மற்றும் ரயில்கள் கடந்து சென்று ஒத்திகை நடத்தி ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மேலும் பிரதமர் ராமேஸ்வரத்தில் நடக்கும் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். விழா இடத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் மூன்றாம் கட்டமாக நேற்று பாம்பன் புதிய, பழைய ரயில் துாக்கு பாலம் திறக்கப்பட்டு ஆந்திரா காக்கிநாடாவில் இருந்து புறப்பட்ட இழுவை கப்பல் இரண்டு பாலங்களையும் கடந்து கொச்சின் சென்றது.புதிய பாலம் கட்டுமானத்தால் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று வணிக கப்பல் கடந்து சென்றது. பின் 10 ரயில் பெட்டிகளுடன் இரண்டு இன்ஜின் பொருத்திய ரயில் புதிய பாலத்தை கடந்து சென்று ஒத்திகை நடந்தது. இதனை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி பார்வையிட்டார்.