நகர் பகுதியில் பெருகும் பாஸ்ட்புட் ஓட்டல்கள்; செயற்கை கலவை அதிகரிப்பு
கீழக்கரை : கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் அதிகளவு பாஸ்ட்புட் கடைகள் பெருகி வருகின்றன.சிக்கன் ப்ரைட் ரைஸ், நுாடுல்ஸ், சவர்மா, எண்ணெய்யில் பொறிக்கப்படும் சிக்கன் உள்ளிட்ட அதிக ரசாயன கலப்புள்ள அஜினமோட்டோ பெருவாரியாக உள்ள உணவுப் பொருட்கள் தயாரிக்க கூடிய ஓட்டல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.பெரும்பாலான ஓட்டல்களில் பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சியை பயன்படுத்துகின்றனர். அதிக நிறமூட்டி ரசாயன கலவையை பயன்படுத்துவதால் அவற்றை சாப்பிடும் பள்ளி மாணவர்கள்,கல்லுாரி மாணவர்கள் உடல் உபாதை, அலர்ஜி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பை சந்திக்கின்றனர்.எனவே உணவு கலப்பட துறையினர் சுகாதாரமற்ற நிலையில் உள்ள ஓட்டல்களை கண்டறிந்து அதிக செயற்கை நிறமூட்டும் பொருள்களை பறிமுதல் செய்து பெருகி வரும் சாலையோர ஓட்டல்களில் உரிய முறையில் விதிமுறைகளை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.