| ADDED : ஜூலை 09, 2024 05:03 AM
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிேஷகத்திற்காக திருப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.புராண இதிகாச சிறப்பு பெற்ற சிவன் கோயிலாக உத்தரகோசமங்கை கோயில் திகழ்கிறது. இங்கு நடனமாடும் திருக்கோலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் தனி சன்னதி அமைந்துள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசனத்திற்காக சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடக்கிறது.மங்களநாதர் சுவாமி சன்னதி பின்புறம் உள்ள மகா மண்டபத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் பாதியில் நின்றது. 2018 பிறகு கூரை கருங்கல் மற்றும் துாண்கள் நிலைநிறுத்தப்பட்டு பணிகள் முழுமை பெற்றுள்ளது. கோயிலின் பிரகாரம் துாண்கள் மற்றும் சுவர்கள் சேதம் அடையாமல் இருக்க பழமை மாறாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய், மணல் ஆகியவற்றை கொண்டு சீரமைப்பு பணிகள் நடந்தன.கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடக்கிறது. மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கண்களை கவரும் வகையில் பல வண்ண ஓவியங்களும் சிற்பங்களும் தீட்டப்பட்டுள்ளன.மங்களநாதர் சுவாமி கோயிலின் சுற்றுப்பிரகார அர்த்தமண்டபத்தின் தரைத்தளத்தில் பல ஆண்டுகளாக மண்மேவி கிடந்த பகுதி சீரமைக்கப்பட்டு அவற்றை சுற்றிலும் எழில் மிகு பாறை கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.கடந்த 2010ல் மங்களேஸ்வரி அம்மன் கோயில் முன்புறமுள்ள ராஜகோபுரம் சீரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் பக்தர்கள் ஆர்வமுடன் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை பார்த்து பிரமித்து செல்கின்றனர்.