உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம்: சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

ராமநாதபுரம்: சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

ராமநாதபுரம்: பேருந்தில் பயணி வாந்தி எடுத்ததால் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிறுத்திய அரசு பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதி கோர விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி: 12 நாள் கைக்குழந்தை மற்றும் இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.உச்சிப்புள்ளி அடுத்த பிரப்பன் வலசை அருகே ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காரில் இருந்த பிறந்து 12 நாட்களே ஆன கைக்குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவரது மனைவி பாண்டி செல்வி (28), அவர்களின் மகள்கள் தர்ஷினா ராணி (08), பிரணவிகா (04) மற்றும் 12 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை ஆகியோர் தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் 12 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ராஜேஷ் அவரது மனைவி பாண்டி செல்வி, அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் பாண்டி செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (70), அங்காலேஸ்வரி (58) ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று விட்டு பாம்பனை சேர்ந்த வாடகை காரில் தங்கச்சிமடத்தை நோக்கி சனிக்கிழமை நள்ளிரவு உச்சிப்புளி அடுத்த பிரப்பன் வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது ராஜேஷ் சென்ற காருக்கு முன்னால் திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென பேருந்திற்குள் வாந்தி எடுத்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தை நெடுஞ்சாலையில் நிறுத்தியுள்ளார். இதனால் அரசு பேருந்தின் பின் பகுதியில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ராஜேஷ் அவரது மகன்களான தர்ஷினா ராணி, பிரணவிகா மற்றும் அவரது உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த அக்காள்மடம் புயல் காப்பகத்தை சோந்த சவரி பிரிட்டோ (35), ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது 12 நாள் கைக்குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.இதையடுத்து அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் படுகாயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பிணவறையில் உடற்கூறாய்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் தங்கச்சிமடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை