அரசு தொடக்கபள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் பாதிப்பு
தொண்டி : தொண்டி அரசு தொடக்க பள்ளியில் (கிழக்கு) கழிப்பறை பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.தொண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு தொடக்கபள்ளி (கிழக்கு) உள்ளது. 224 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி முன்பு கட்டபட்ட கழிப்பறை பராமரிப்பு இல்லாததால் தற்போது பூட்டி கிடக்கிறது.இது குறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் காளிஸ்வரி கூறியதாவது: கழிப்பறை சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் பூட்டபட்டுள்ளது. பள்ளியில் கழிப்பறை வசதியில்லாததால் மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். பள்ளி முன்பு தற்காலிகமாக அமைக்கபட்ட கழிப்பறையிலும் போதிய இடவசதியில்லை. அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தர விட்டது.ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கழிப்பறையை பராமரித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.