பனையடியேந்தல் உயர்நிலைபள்ளியில் தரமற்ற கட்டடம் வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே திருப்புல்லாணி ஒன்றியம் பனையடியேந்தல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 2019ல் கட்டப்பட்டது.கடந்த 2021 க்கு பிறகு 6 முதல் 10 வகுப்புகள் பள்ளி கட்டடத்தில் செயல்படுகிறது. அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுமானம் அனைத்தும் தரமற்ற முறையில் இருந்ததால் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும் பெயர்ந்தும் பொலிவிழந்து காணப்பட்டது.நேற்று முன்தினம் வகுப்பறையில் மாணவர்கள் இருவரின் தலையில் சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்ததால் சிறு காயம் ஏற்பட்டது. இதே போல் பிற மாணவர்களுக்கும் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் மாணவர்கள் திரண்டு பனையடியேந்தல் கிராமத்தின் சாலையில் குவிந்தனர்.மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:தரமற்ற முறையில் பள்ளி கட்டடத்தை பொதுப்பணித்துறையினர் கட்டியுள்ளனர். உப்பு தண்ணீரைக் கொண்டும், தரமற்ற மணல் பயன்படுத்தி கட்டியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து உத்தரகோசமங்கை போலீசார் மற்றும் திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.