கடலில் காணாமல் போன மீனவர்களை தேட அரசும் மீன் வளத்துறையும் உதவ வேண்டும்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் இரு மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இருவரை தேடி வருகின்றனர். தேடுவதற்கான டீசல் செலவு, இலங்கை பகுதியில் தேடுவதற்கான அனுமதியை பெற்றுத்தர வேண்டும் என கடல் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க டெல்வின்ராஜ் என்பவரது படகில் சுரேஷ், எமரிட், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்றனர். கடல் சீற்றத்தால் நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் டெல்வின்ராஜ், சுரேஷ் ஆகியோர் நீந்தி கச்சத்தீவில் கரை சேர்ந்தனர். எமரிட், வெள்ளைச்சாமி ஆகியோரை காணவில்லை. இவர்களை கடலோர காவல் படை, கப்பற்படை, ஐ.என்.எஸ்., பருந்து ஆகிய அமைப்புகள் கப்பல், ரோந்து படகு, ெஹலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியிருப்பதாவது:காணாமல் போன மீனவர்களை அவர்களது உறவினர்கள், அவர்களை சார்ந்தவர்களும் தேடிச் செல்வது அவசியம். நடவடிக்கைக்கு உதவியாக நமது கடல் பகுதியில் மட்டுமின்றி இலங்கை கடல் பகுதியில் தேடி செல்வதற்கான அனுமதியை நமது அரசு நிர்வாகங்கள் பெற்றுத்தர வேண்டும்.செலவினங்களுக்கு மீன் வளத்துறை இயக்குநர் நிர்வாகத்தில் கேட்டு வாங்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். இது தங்களது பொறுப்பை தட்டி கழிக்கும் செயலாகும். தமிழக அரசும், கலெக்டரும் இவ்விஷயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.