| ADDED : மார் 22, 2024 04:35 AM
திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தீக்குளிக்க முயன்ற கார்த்திகேயனை தடுத்து, சமரசம் செய்து அவருக்கு தாசில்தார் புதிய சட்டை வாங்கி கொடுத்துள்ளார். தொண்டி அருகே சம்பை கிராமத்தை சேர்ந்த கே.கார்த்திகேயன் 44. 2010ல் அக்கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் சிலருக்கு பட்டா வழங்கபட்டது. இவருக்கு வழங்கிய இடத்தை சிலர் ஆக்கிரமித்ததால் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அருகிலிருந்தவர்கள் தடுத்தனர். தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில், சம்பந்தப்பட்டவரின் புகாரில் நில அளவை செய்து இரு இடங்களுக்கும் தனி, தனியாக சர்வே எண் வழங்கபட்டுள்ளது. இவரது வீட்டிற்கு செல்லும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மண்ணெண்ணையால் நனைந்தபடி நின்றிருந்த கே.கார்த்திகேயனுக்கு தாசில்தார் புதிய சட்டை வாங்கி கொடுத்தார்.