| ADDED : ஜூன் 03, 2024 02:46 AM
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு தனியாக டாக்டர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவாடானையில் தாலுகா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தினமும் 30 கி.மீ., சுற்றளவில் இருந்து காய்ச்சல், விபத்து, பரிசோதனை ஆகிய சிகிச்சைகளுக்காக, ஏராளமானோர் வந்து செல்கின்றனர். திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் பகுதிகளில் நடக்கும் விபத்து, கொலை, தற்கொலையில் இறப்பவர்களின் உடல்கள் இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதத்திற்கு 10க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்கென தனி டாக்டர் இல்லை. தற்போது ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளார். அவரே பிரேத பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அந்த டாக்டர் உள் மற்றும் புற நோயாளிகளை பார்த்து வரும் வரை, இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.