21 பள்ளிகளில் 100 நாட்களில் 100 சதவீதம் வாசித்தல் திட்டம்
திருவாடானை : திருவாடானை ஒன்றியத்தில் 21 அரசு தொடக்கபள்ளிகளில் 100 நாட்களில் 100 சதவீதம் வாசித்தல் திட்டம் செயல்படுத்தபட்டு மாணவர்களின் திறன் பரிசோதனை நடக்கிறது. திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூறியதாவது:அரசு தொடக்கபள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் 100 நாட்களில் 100 சதவீதம் வாசித்தல் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் திருவாடானை ஒன்றியத்தில் ஆதியூர் (கிழக்கு), கடம்பனேந்தல், குளத்துார், கோடனுார், சின்னத்தொண்டி, திருவடிமதியூர், தீர்த்தாண்டதானம், தொண்டி (கிழக்கு), புதுவயல், மச்சூர், அடுத்தகுடி, அரசூர், ஏழுர், கருப்பூர், கீழஅரும்பூர், குஞ்சங்குளம், சம்பூரணி, சிறுகம்பையூர், பேராமங்களம், காடாங்குடி, தினையத்துார் ஆகிய பள்ளிகளில் இத் திட்டம் முதல் கட்டமாக துவக்கப்பட்டுள்ளது. நுாறு நாட்களில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதம் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், போன்ற அடிப்படை திறன்களை கற்பிப்பார்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் முன் இத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும். நேற்று 1 முதல் 3 ம் வகுப்பு வரை மாணவர்களின் திறன் பரிசோதனை நடந்தது. 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு ஏப்.16ல் நடைபெறும். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் செயல்படுத்தபடும் என்றனர்.