ஏழு மாதத்தில் ரேஷன் அரிசி கடத்திய 108 பேர் கைது 46,000 கிலோ பறிமுதல்
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழு மாதத்திற்குள் ரேஷன் அரிசி கடத்திய 108 பேர் கைது செய்யபட்டு 46 ஆயிரம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். இது குறித்து குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025 ஜன., முதல் ஜூலை வரை ஏழு மாதத்திற்குள் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 46 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ராமநாதபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.