உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது; 30 படகுகளின் வலைகள் மூழ்கடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது; 30 படகுகளின் வலைகள் மூழ்கடிப்பு

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 30 படகுகளின் மீனவர்கள் வலைகளை மூழ்கடித்து விட்டு கரை திரும்பினர்.ராமேஸ்வரத்தில் இருந்து டிச.4ல் 427 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை படகில் இழுத்து வைத்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பிரிட்டோ, நிஜோ படகை இலங்கை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.

14 பேர் கைது

படகில் இருந்த மீனவர்கள் ரிபாக்ஸன் 26, ராஜபிரபு 27, அரவிந்த் 24, ராபின்ஸ்டன் 41, முனீஸ்வரன் 21, பிரசாந்த் 51, ஆரோக்கியம் 58, பெட்ரிக்நாதன் 37, ஜான் இம்மரசன் 38, அருள் பிரிட்சன் 29, நிசாத் 25, பரலோக மேட்டன் வினித் 24, அந்தோணி லிஸ்பன் 24, மேலும் 15 வயது சிறுவன் ஆகிய 14 பேரை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இவர்கள் மீது மீன்துறையினர் வழக்குப் பதிந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி டிச.19 வரை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சிறுவனை இந்திய துாதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

வலைகள் மூழ்கடிப்பு

இலங்கை வீரர்கள் விரட்டிய போது கைதுக்கு பயந்து 30 படகுகளின் மீனவர்கள் வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்து விட்டு வெறும் படகுடன் ராமேஸ்வரம் கரை திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajasekar Jayaraman
டிச 06, 2024 23:09

30 படகு 14 பேர் மட்டும் கைது எங்கோ இடிக்கிறதே.


அப்பாவி
டிச 06, 2024 07:40

இலங்கைக்கு அடுத்த கட்ட உதவியாக ஒரு 50000 கோடியை ஒன்றிய அரசு குடுக்கும்னு செய்தி எதிர்பார்க்கலாம். நம்ம ஜெய் சார் நேராப் போய் குடுத்துட்டு வருவாரு. முருகன் சார், ராஜா சார், அண்ணாமலை சார் எல்லாரும் விடியல் ஆட்சியை வசை பாடுவார்கள். விடியல் சார் வழக்கம் போல் ஒரு லெட்டர் எழுதி போஸ் பண்ணிடுவார். இலங்கை சார்கள் கைதானவங்களை சிறையில் வெச்சு பராமரிக்க பணமில்லாமல் விடுதலை செஞ்சுரும். அடுத்த பேட்ச் எல்லைதாண்டி மீன் பிடிச்சு கைதாகும். rinse, wash, repeat.


முக்கிய வீடியோ