பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 2 நாள் கமிஷனர் ஆய்வு
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை நவ.,13, 14ல் பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்ய உள்ளார்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பால கட்டுமானப் பணி முடிந்தது. பால நடுவில் துாக்கு பாலம் பொருத்தப்பட்டு பல கட்ட சோதனையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வார் என்றார். ஆனால் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப்பணி முழுமை பெறாமல் இருந்ததால் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்வதும் தாமதமானது. தற்போது ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான ஒரு பகுதி முடியும் தருவாயில் உள்ளது.நவ., 13ல் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி, பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், சிக்னல் பாய்ன்ட் பகுதிகளை ஆய்வு செய்கிறார்.நவ.,14ல் புதிய துாக்கு பாலம் திறந்து மூடுவதையும், பாலத்தில் ரயில் இன்ஜின், காலி பயணிகள் ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தியும் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்கு பின் நவ.,25க்குள் பாம்பன் பால திறப்பு விழா நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.