பாம்பன் புதிய ரயில் பாலத்தை 2 கப்பல், 2 படகுகள் கடந்தன
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய, பழைய ரயில் துாக்கு பாலத்தை இரு இழுவை கப்பல்கள், இரு படகுகள் கடந்து சென்றன.ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து புறப்பட்ட இழுவை கப்பல் கோவா செல்ல நேற்று முன்தினம் பாம்பன் கடற்கரை வந்தது. இதையடுத்து நேற்று மதியம் பாம்பன் பழைய, புதிய ரயில் பாலத்தின் துாக்கு பாலங்கள் திறக்கப்பட்டதும் இக்கப்பல் கடந்து கோவா சென்றது. இதனை தொடர்ந்து கோவாவில் இருந்து காக்கிநாடா சென்ற ஒரு இழுவை கப்பலும், லட்சத்தீவில் இருந்து கடலுார் சென்ற ஒரு பாய்மர படகும், கோவாவில் இருந்து காக்கிநாடா சென்ற ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகும் இரு துாக்கு பாலங்களை கடந்து சென்றன.அப்போது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள், கப்பல்கள், படகுகள் ரயில் பாலத்தை கடந்து செல்வதை பார்த்ததும் உற்சாகத்தில் கைத்தட்டி மகிழ்ந்தனர்.