ராமநாதபுரம் அருகே வெள்ள நீரில் மூழ்கிய 200 ஏக்கர் உப்பளங்கள்
திருப்புல்லாணி:இரண்டு வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 200 ஏக்கர் உப்பளங்கள் வெள்ள நீர் புகுந்து மூழ்கியது.இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் கூறியதாவது: திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ஆனைகுடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உப்பளங்கள் உள்ளன. தற்போது பெய்த மழையால் பெருவாரியான உப்பளங்களில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. மிதமிஞ்சிய வெள்ள நீர் கொட்டகுடி ஆற்றின் வழியாக சேதுக்கரை கடலில் கலக்கிறது.வெள்ள நீர் வற்றியவுடன் பாத்திகளை முறையாக சீரமைத்து அதன் பிறகு உப்பள உற்பத்தி துவங்கும். இந்நிலையில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட உப்புகளை தார்ப்பாயின் மூலமாக பாதுகாப்பாக மூடி வைத்திருக்கிறோம். மழை காலத்திற்கு முன்பு விளைவிக்கப்பட்ட உப்புகளை சரக்கு வாகனங்களில் துாத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளோம். வெள்ளநீர் வடிந்தவுடன் இயல்பு நிலை திரும்பியதும் உப்பு உற்பத்தி துவங்கும் என்றனர்.