பொட்டிதட்டி பஸ் ஸ்டாப்பில் கிடந்த 500 கிலோ ரேஷன் அரிசி
பரமக்குடியில் தொடரும் கடத்தல் சம்பவம்பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடரும் சூழலில், நேற்று முன்தினம் இரவு பொட்டிதட்டி பஸ் ஸ்டாப்பில் 500 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் உள்ளிட்ட இடங்களில் ரேஷன் கடைகள் செயல்படுகிறது. தொடர்ந்து கடைகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பரமக்குடி அருகே பொட்டிதட்டி பஸ் ஸ்டாப்பில் தலா 50 கிலோ எடை உடைய 10 பாலிதின் பைகளில் அரிசி இருந்துள்ளது. அதனைப் பார்த்த பகுதி மக்கள் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் சம்பவ இடத்தில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினார். அவற்றை கமுதக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்ததாக தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியில் கடத்தல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.