முதுகுளத்துார் தாலுகா தேரிருவேலியில் நோயால் 5000 ஏக்கரில் நெல் பாதிப்பு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா தேரிருவேலி பிர்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் அவ்வப்போது பெய்த மழையால் செந்தாழை நோய் தாக்குதல் ஏற்பட்டு 5000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட தேரிருவேலி, காக்கூர், வளநாடு, பூக்குளம், இளஞ்செம்பூர், ஏனாதி கீழத்துாவல், அப்பனேந்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர். போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் வீணாகியது. அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் வளர்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் களை எடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பெய்த மழையால் வறண்டு கிடந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி வீணாகியது. இதனால் நோய் தாக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய அணி தலைவர் மைக்கேல் கூறியதாவது:இப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக நெல், மிளகாய் விவசாயம் செய்துள்ளனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி தடைபட்டது. பின் தொடர்ச்சியாக பெய்த மழையால் தண்ணீரில் மூழ்கி வீணாகியது. மேலும் நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதலால் 5000 ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பயிர்கள் அறுவடைக்கு ஏற்றதில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை நீரில் மூழ்கி மிளகாய் செடிகளும் வீணாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட அதிகாரிகள் கிராமங்களில் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.